×

தேர்தல் பத்திரம் விவரங்களை தெரிவிக்காத எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 11ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை வௌியிட ஜூன் 30 வரை காலஅவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன்மீது வரும் 11ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கான சட்டம் கடந்த 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ ரூ.7000 கோடி வரை நன்கொடையாக வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக தொடரப்பட்ட 4 பொதுநல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 15ம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில், “ஒன்றிய பாஜ அரசால் கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அதனை ரத்து செய்கிறோம். தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியை, நிதி அளித்தவர்களிடமே அரசியல் கட்சிகள் உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும்.மேலும் மார்ச் 6ம் தேதிக்குள்(நேற்று முன்தினத்துக்குள்) தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும். மார்ச் 13ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் கடந்த 4ம் தேதி ஒரு கோரிக்கை மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30ம் தேதி அதாவது நான்கு மாதம் வரை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தேர்தல் பத்திரம் என்ற மோசடி திட்டத்தின் முக்கிய பங்காளியான பாஜ, பாரத ஸ்டேட் வங்கியை கேடயமாக பயன்படுத்தி தேர்தல் முடியும் வரை அதன் விவரங்கள் வௌியாவதை தடுக்க முயற்சிக்கிறது. இது உச்ச நீதிமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றும் செயல் என எதிர்க்கட்சியினர் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளனர். பாரத ஸ்டேட் வங்கி காலஅவகாசம் கேட்டதை கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், ‘தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவகாரத்தில் மார்ச் 6ம் தேதிக்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காக எஸ்.பி.ஐ வங்கிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்) என்ற அமைப்பு சார்பாகவும் எஸ்பிஐ வங்கிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு முன்னதாக நடந்தபோது தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் எங்களிடத்தில் தயாராக இருக்கிறது என்று சொன்ன பாரத ஸ்டேட் வங்கி தற்போது அவகாசம் கேட்கிறது.

இது சட்டத்துக்கு புறம்பானதாகும். மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளதால், இந்த மனுக்களை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உச்ச நீதிமன்றம் உடனடியாக ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக எஸ்பிஐ தாக்கல் செய்த மனு மார்ச் 11ம் தேதி பட்டியலிடப்பட உள்ளது. எனவே அவமதிப்பு மனுவையும் அதனுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘தயவுசெய்து ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். மார்ச் 11ம் தேதி விசாரித்து நான் உத்தரவு பிறப்பிக்கிறேன்’ என்றார்.

உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் முயற்சி
ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொது காரணத்துக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவில்,’ எஸ்பிஐ அவகாசம் கேட்டு தாக்கல் செய்த விண்ணப்பம் தவறானது. இந்த நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் மீறுவதை இந்த விண்ணப்பம் நிரூபிக்கிறது. இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் தெளிவான முயற்சியாகும். எனவே இந்த நீதிமன்றம் பிப்ரவரி 15 தேதியிட்ட உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மீது அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். எஸ்பிஐயின் விண்ணப்பத்தை ஆதரிக்கும் பிரமாணப் பத்திரம் வங்கியின் தலைவர் அல்லது நிர்வாக இயக்குநரால் தாக்கல் செய்யப்படவில்லை.

ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திற்கும் ஒதுக்கப்பட்ட பிரத்யேக எண் மற்றும் அதை வாங்குபவரின் (கேஒய்சி) விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள் என்று எஸ்பிஐ கூறியது. எனவே, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தையும் வாங்குபவர்களின் அடையாளத்தை எஸ்பிஐ நன்கு அறிந்திருக்கிறது. 2024 ஜனவரி நிலவரப்படி, 25 அரசியல் கட்சிகள் மட்டுமே தங்கள் கணக்கைத் தொடங்கி, தேர்தல் பத்திரங்களை பணமாக்குவதற்குத் தகுதி பெற்றுள்ளன. எனவே, இந்த அமைப்பு ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், இந்தத் தகவலைத் தொகுப்பது கடினம் அல்ல. இந்த நீதிமன்றம் வழங்கிய குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் எஸ்பிஐ வழங்குவது கட்டாயமாகும்.

ஏனெனில் வாக்காளர்கள் மக்களவையின் போது தேர்தல் பத்திரங்கள் பற்றிய முழுமையான தகவலை அறிந்து கொள்ளாவிட்டால், அவர்களின் தகவலறிந்த கருத்தை சரியாகப் பயன்படுத்த முடியாது. எஸ்பிஐயின் இந்த எதிர்மறையான அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. அரசியல் வர்க்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் குடிமக்களின் குரல் மற்றும் தணிக்கைக்கான உரிமையை நசுக்குவதற்கான அதன் தெளிவான நோக்கத்தை காட்டிக் கொடுக்கிறது. எனவே இது நீதிமன்ற அவமதிப்பு கடுமையான மீறலாக கருதப்பட வேண்டும்’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

The post தேர்தல் பத்திரம் விவரங்களை தெரிவிக்காத எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 11ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : SBI ,Supreme Court ,NEW DELHI ,SBI Bank ,Chief Justice ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...